கடந்த காலங்களில் கொழும்பு அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்களில், விடுதலைப் புலிகள் தரப்பின் வர்த்தக பிரதானியாக செயற்பட்ட எமில்காந்தனும் முக்கியத்துவம் பெறுகிறார்.
விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் என பல வழிகளில் செயற்பட்டமையால் எமில்காந்தன் பிரபலமாகி இருந்தார்.
இலங்கை அரசியலை தீர்மானிக்கும் தருணத்தின் போது, கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கப்பட்டார்.
இதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வழங்கியிருந்தார்.
அப்போதைய காலத்தில் சமாதான நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து மஹிந்த களமிறங்கினார்.
எனினும் நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடபகுதி மக்கள் ஜனாதிபதி தேர்தலை முற்றாக புறக்கணித்திருந்தனர்.
இதன்மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த வெற்றி பெற்றார்.
எனினும் இந்த தேர்தலின் போது பல்வேறு கொடுக்கல் வாங்கல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் எமில்காந்தன் நேரடியாக தொடர்பு பட்டவர் என்பதால் ஊடக வாயிலாக அதிகம் பேசப்பட்டவராகும்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அடுத்து விடுதலைப்புலிகளுக்கும், மஹிந்த தரகர்களுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வும், பணக் கொடுக்கல் வாங்கல்களும் வெளிவரத் தொடங்கின.
தமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் பிரதிநிதிக்குமிடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தமை அறிந்த விடயமே.
தமிழ் மக்களின் பெயரால் பாரிய வீடமைப்புத் திட்டத்திற்கென பெரும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், கருணா தரப்பினரின் ஆயுதங்கள் பறிக்கப்படும் எனவும், புலிகளால் குறிப்பிடப்படும் பிரமுகர்கள் முக்கிய அரசியல் பதவிகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மஹிந்த அரசினால் விடுதலைப் புலிகளுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதன்படி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் ராஜபக்ஸ அரசு வட பகுதி வீடமைப்புத் திட்டத்திற்கென பல மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை தீர்மானிக்கப்பட்டன. இதன்படி குறித்த பணத்தை புலிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கூற்றையும் அரசு ஏற்றுக்கொண்டது.
இவை இவ்வாறிருக்க, இதற்கு முன்னரே புலிகளின் முக்கிய பிரதிநிதியாக அவர்களது உளவுப் பிரிவில் செயற்பட்ட வர்த்தகரான எமில்காந்தனால் வழங்கப்பட்ட பொய்யான வங்கிக் கணக்கிற்கு 150 மில்லியன் வழங்கப்பட்ட விடயம் பின்னர் நடாத்திய விசாரணைகளின் போதே தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த ஊழல் நடவடிக்கைகளை சட்ட ரீதியானதாக மாற்றும் வகையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட “பி ரொம்” என அழைக்கப்படும் சுனாமி அனர்த்த நிவாரண பொறிமுறைக்கு பதிலாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பு ஒனறு உருவாக்கப்பட்டு அந்த புதிய அமைப்பிற்கு டிரான் அலஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனால், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரான் அலஸ் வீட்டிற்கு கைக்குண்டு வீசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்..
“எமில் காந்தனிடம் 180 மில்லியன் ரூபாய் பணத்தை பஸில் ராஜபக்ஸவே வழங்கினார்” என டிரான் அலஸ் குற்றம் சாட்டினார். ஆனால் இன்றுவரை அதற்கான விசாரணைகள் நடத்தப்படவில்லை.
இந்தச் செய்தியால் பல விமர்சனங்கள் எழுந்ததுடன், பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ புலிகளுடன் தாம் உறவு வைத்திருக்கவில்லை என பாராளுமன்றத்தில் மறுத்திருந்தார்.
எமில்காந்தனுக்கு சொந்தமான வங்கிக்கணக்கிற்கு ஏன் பணம் சென்றது?, பஸில் ஏன் குறித்த பணத்தை எமில் காந்தனுக்கு வழங்க வேண்டும்?, தற்போது எமில்காந்தன் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இந்த நல்லாட்சியிலாவது தொடருமா? என்பது மக்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதேவேளை கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில், 200 மில்லியன் ரூபா பணத்தை தானும் பஷில் ராஜபக்ஷவும் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கையளித்ததாக காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி கடந்த 2007ஆம் ஆண்டு நாடாளுமன்றில் முதன் முதலாக இந்த தகவலை வெளியிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.