Topics :
#Jayalalithaa #Jayalalithaangry
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துவிட்டன.'நியூயார்க் மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை நடந்து வந்தாலும், முதல்வர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்' என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.
சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.' கடந்த 20 ஆண்டுகளில் சிகிச்சைக்காக இவ்வளவு நாட்கள் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை' என்பது கார்டன் கவலை.
நேற்று மாலை முதல்வரின் உடல்நலம் குறித்து சில தகவல்கள் பரவியதும், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து அறிக்கை வெளியிடச் சொன்னார் சசிகலா.
இதனையடுத்து, 'முதல்வரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தது காவல்துறையின் அறிவிப்பு.
இந்நிலையில், 'இப்போது எப்படி இருக்கிறார் முதல்வர்?' என்ற கேள்வியை மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம்.நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், " முதல்வர் உடல்நலன் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.திரவ உணவுகளை எடுத்துக் கொள்கிறார். நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்கிறார். மருத்துவமனையிலேயே அவருக்கென பிரத்யேகமான திரவ உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
நேற்று மாலை செய்தித்தாள்களை வாங்கிப் படித்தார். சசிகலாவும் இளவரசியும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள்.
'சீக்கிரமே வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர். அதன் வெளிப்பாடாக மருத்துவமனை ஊழியர்களிடம் கோபத்தைக் காட்டுகிறார்.
அவரைக் கவனித்துக் கொள்ள ஷிப்ட்டுக்கு மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கின்றனர்.
நேற்று அவருக்கு மாத்திரைகளைக் கொடுப்பதற்காகச் சென்ற நர்ஸிடம், ' இது என்ன மாத்திரை? சிவக்குமார் எங்கே? (முதல்வரின் பிரத்யேக மருத்துவர்) அவரை வரச் சொல்லுங்கள்' எனக் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.
இதனால் அவர் அருகில் செல்லவே நர்சுகள் பயப்படுகின்றனர்.
நேற்று மாலை முதல்வரின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியானதும், முதல்வரை கவனித்துக் கொள்ளும் நர்சுகள் முதல் இரண்டாம் தளத்தின் பொறுப்பாளர்கள் வரையில், அனைவரது செல்போன் எண்களையும் வாங்கிக் கொண்டார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
' ஊழியர்கள் வேறு எதாவது எண்களைப் பயன்படுத்துகிறார்களா' என விசாரித்தார். இதன்பின்னர் எங்களிடம், ' உங்கள் அனைவரது போனும் ட்ரேஸ் செய்யப்படுகிறது.
இங்கிருந்து எந்த ஒரு தகவல் சென்றாலும் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என எச்சரித்துவிட்டுச் சென்றார். இதனால் ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்வருக்கு நியூயார்க்கைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, சர்வதேச மருத்துவக் குழு ஒன்று, அப்போலோ மருத்துவமனையோடு நேரடி தொடர்பில் இருக்கிறது. முன்பைவிட வேகமாக குணமடைந்து வருகிறார் முதல்வர்.
எனவே, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். காவல்துறை கெடுபிடிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்" என ஆதங்கப்பட்டார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதற்கொண்டு அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளும் அரசு ஆலோசகர்களும் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்புகின்றனர்.
இந்த சந்திப்பு குறித்து ஏதேனும் ஒரு படத்தை வெளியிட்டாலே தேவையற்ற வதந்திகள் உலவுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குமுறலை வெளிப்படுத்துகின்றனர் அதிகாரிகள்.
- Vikatan