சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மின்கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள Gotthard என்ற பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் வேளையில் ராணுவ முகாம்களை பரிசோதனை செய்வதற்காக 4 பிரான்ஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ராணுவ ஹெலிகொப்டர் Gotthard பகுதிக்கு வந்துள்ளது.
ஹெலிகொப்டர் தரையிறங்கியதும் அதிலிருந்து 4 அதிகாரிகள் கீழே இறங்கிய பின்னர் ஹெலிகொபர் மீண்டும் பறக்க தொடங்கியுள்ளது.
அப்போது, ஹெலிகொப்டரில் இரண்டு விமானிகள் பயணம் செய்துள்ளனர்.
ஹெலிகொப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 2,000 மீற்றர் உயரத்தில் பறந்தபோது அந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
பயணிக்கும் வழியில் இருந்த மின்கம்பியில் ஹெலிகொப்டர் திடீரென சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறக்கை உடனைந்த அந்த ஹெலிகொப்டர் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தை கண்ட சிலர் விரைந்து சென்று தீயை அணைக்க போராடியுள்ளனர்.
பின்னர், உள்ளே இருந்த விமானிகளை மீட்டபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மின்கம்பியில் சிக்கி ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.